திருப்பூர் தாக்குதல் சம்பவம்: தலைமை செயலர் மற்றும் டிஜிபி.,க்கு நோட்டீஸ்
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பதிலளிக்க
தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்தபடியே போலீஸாரும், அதிரடிப்படையினரும் திடீரென தடியடி நடத்தினர். இதை எதிர் பார்க்காத பெண்களும், குழந்தைகளும் சாலையில் விழுந்து காயமடைந்தனர். போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் 3 பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்தார். இதனால் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவகிறது. மேலும் அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாகி வருகிறது.
ஏடிஎஸ்பி பாண்டியராஜன், பல்லடம் டிஎஸ்பி மனோகரன், ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்யவேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மீது ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்கிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், தமிழக போலீஸ் டிஜிபி, திருப்பூர் மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு தேசிய மனிதஉரிமைகள் கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.