சட்டசபை: திமுக உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்
சட்டசபையில் இன்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே” பயணம் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், “நமக்கு நாமே” பயணம் என்று கூக்குரல் போட்டவர்கள் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது தி.மு.க. துணை தலைவர் துரைமுருகன் எழுந்து, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கோரிக்கை விடுத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சபாநாயகர் அதை ஏற்க மறுத்து விட்டார். யார் பெயரையும் குறிப்பிட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசாததால் அவர் பேசியதை நீக்க வேண்டியதில்லை என்றார்.
சபாநாயகர்:- யார் பெயரையும் குறிப்பிட்டு ஒருமையில் சொல்லி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் அவர் அப்படி பேசவில்லை.
மு.க.ஸ்டாலின்:- நமக்கு நாமே திட்டம் பற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதற்கு உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்றால் இந்த பயணம் தமிழ்நாடு முழுவதும் எந்த அளவுக்கு பிரபலம் அடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் முன்பு முதல்-அமைச்சர் இதுபற்றி பேசியது பற்றியும் ஸ்டாலின் உதாரணத்துக்கு குறிப்பிட்டார்.
சபாநாயகர்:- முதல்-அமைச்சர் பற்றி மு.க. ஸ்டாலின் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் அவ்வாறு பேசவில்லை.
ஓபன்னீர்செல்வம்:- தேவை இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி உள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசியது எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
சபாநாயகர் :- எதிர்க்கட்சி தலைவர் முதல்-அமைச்சர் பற்றி பேசியதை இங்கு பதிவு செய்ய முடியாது.
உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து சபாநாயகருக்கு எதிராக உரக்க கோஷம் போட்டனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று சபாநாயகர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச வாய்ப்பு கேட்டனர்.
ஆனால் சபாநாயகர் யாருக்கும் பேச வாய்ப்பு தர முடியாது என்றார். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் உட்காராமல் நின்று கொண்டே கோஷமிட்டனர்.
இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
ஆனாலும் சபை காவலர்கள் முதலில் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கினார்கள். இதை கண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். அப்போது யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி சபை காவலர்கள் மீது வீசினார். காவலர்களின் தொப்பியையும் பறித்து வீசினார்கள். இதனால் சபை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும் சபை காவலர்கள் மு.க.ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி சபைக்கு வெளியில் கொண்டு வந்தனர். பிறகு தரையில் ஸ்டாலினை உட்கார வைத்தனர். அதன் பிறகு துரைமுருகனையும் குண்டுகட்டாக தூக்கி வந்து ஸ்டாலின் அருகே இறக்கி வைத்தனர். இப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றினார்கள். இதனால் சபை முழுவதும் பரபரப்பு நிலவியது.
வெளியே வந்த தி.மு.க உறுப்பினர்கள் ‘காப்பாற்று... காப்பாற்று ...ஜனநாயகத்தை காப்பாற்று’ என்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதன்பிறகு அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்டு செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.