உணர்வுகள் மற்றும் உத்திகளின் கலப்பாக வெளிவந்துள்ளது அதிமுக வேட்பாளர் பட்டியல்!!
அதிமுக-வின் மிகப்பெரிய ஆளுமையாக, மக்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இல்லாமல் கட்சி போட்டியிடும் முதல் தேர்தலாகும் இது.
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கிவிட்டன. கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரையில், தொகுதிகளின் எண்ணிக்கையில் இருந்த அதே பிரச்சனை எந்த தொகுதி யாருக்கு என்பதிலும் வெகுவாக உள்ளது. இருப்பினும், தொகுதிகளில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு, தற்போதைய சூழல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தொகுதிகள் இம்முறை கராராக ஒதுக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது.
அதிமுக-வைப் (AIADMK) பொறுத்தவரை, ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான 171 வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை புதன்கிழமை கட்சி அறிவித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சி 23 அமைச்சர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள 45 எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த பட்டியலில் 14 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும், நிலோஃபர் கபீல் (தொழிலாளர்), ஜி பாஸ்கரன் (காதி மற்றும் கிராமத் தொழில்கள்) மற்றும் எஸ்.வளர்மதி (பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினர் நலன்) தவிர பல புதியவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.
பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், கட்சி எடுத்துள்ள வேட்பாளர் தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்தமாக, அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. கட்சியின் முதல் பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு ஏற்கனவே இடங்கள் வழங்கப்பட்டன.
ALSO READ: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்
ஏற்கனவே எம்.எல்.ஏ பொறுப்பு வகிக்கும் பலரை மீண்டும் இம்முறையும் வேட்பாளர்களாக அறிவிக்க, கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் இரண்டு மூத்த உறுப்பினர்களும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களுமான கே பி முனுசாமி மற்றும் ஆர் வைத்திலிங்கம் ஆகியோர் வேப்பனப்பள்ளி மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். முனுசாமி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், வைத்திலிங்கம் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
சபாநாயகர் பி தனபால் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் ஆகியோர் அவினாசி மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டனர்.
"முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். கட்சி மற்றும் மக்களின் விசுவாசத்திற்கு பாத்திரமானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, புதிய முகங்களை ஆதரிப்பது, வேட்பாளர்களின் திறமை, புகழ், செல்வாக்கு, மக்கள் சேவை ஆகிவற்றிற்கான அங்கீகாரம் அளிப்பது என இவற்றின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று ஒரு மூத்த அமைச்சர் கூறினார்.
ஆறு வேட்பாளர்களின் முதல் பட்டியலுடன், அதிமுக 182 தொகுதிகளிலும், அதன் கூட்டணி காட்சிகளான பாமக 23 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இன்னும் ஒன்பது இடங்கள் ஒதுக்கப்படவில்லை. அதிமுக, இரண்டு உள்ளூர் அமைப்புகளுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கியது. எனினும், அவர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள்.
2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் (TN Assembly Elections) அதிமுக-வைப் பொறுத்தவரை, ஒரு உணர்வுப்பூர்வமான தேர்தலாக இருக்கும். கட்சியின் மிகப்பெரிய ஆளுமையாக, மக்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இல்லாமல் அவர்கள் போட்டியிடும் முதல் தேர்தலாகும் இது. 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அவரது தலைமையில் கட்சி அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியைக் கண்டது. அதிமுக இப்போது பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநிலத்தில் தனது பரம எதிரியான திமுக-வை பின்னுக்குத் தள்ளி கோட்டையை மீண்டும் பிடிக்க அதிமுக பலதரப்பட்ட உத்திகளை பயன்படுத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. திமுக-வின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், ஊழலில் ஈடுபட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் அதிமுக மீண்டும் இடங்களை வழங்கியுள்ளதாக திமுக (DMK) செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். "ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் மீண்டும் அதிமுக தொகுதிகளை வழங்கியுள்ளது. அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்ட பின்னர் மார்ச் 12 முதல் எங்கள் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்குவார்கள்" என்று அவர் கூறினார்.
ALSO READ: மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR