சட்டப்பேரவை கூட்டம் : 2-வது நாளாக இன்றும் அமளி
சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் 16-ம் தேதி கூடியது. அன்று கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். 17-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று கவர்னர் உரை மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கியது. திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. குறிப்பாக கச்சத்தீவு பிரச்சினையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக பதில் அளித்தார். மீண்டும் இன்று கவர்னர் உரை மீதான விவாதம் 2-வது நாளாக அதிமுக. எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற காரணம் அதிமுக-வின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக சாதனைகள் அனைத்து தரப்பினரையும் சென்று அடைந்தே முக்கிய காரணமாகும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், சிலர் தேர்தல் சமயத்தில் 23-ம் புலிகேசி போல் சென்று தேர்தல் பிரசாரம் செய்தனர் என்றார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக-ன் நமக்கு நாமே திட்ட பிரசாரத்தை வெற்றிவேல் மறைமுகமாக கிண்டல் செய்து பேசியதாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டதும் ஆவேசமான திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீண்டும் பேசிய வெற்றிவேல், இலங்கை தமிழர்கள் மற்றும் பிரபாகரன் கொல்லப்பட்ட போது தமிழ்நாட்டில் திமுக. ஆட்சிதான் நடந்தது என்று குற்றம் சாட்டினார். இதற்கும் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை பார்த்து ஒருவர் கை நீட்டி பேசியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்டு சபாநாயகர் தனபால்:- உறுப்பினர்கள் அவை மரபுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாமல் கூச்சலிட்டு கூட்ட நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.