பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இன்றைய பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள்
சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான மக்கள் எதிர்பார்ப்பு இடையே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காகிதம் இல்லா பட்ஜெட் தக்கால்தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர்.
இன்றைய பட்ஜெட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு என்னென்ன திட்டங்கள் போடப்பட்டு உள்ளது என்பதைக் குறித்து பார்ப்போம்.
பள்ளிக்கல்வித் துறை:
கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முன்மாதிரிப் பள்ளிகள் இயக்க முடிவு:
அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது.
வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (Smart Classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க | தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்
நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள்:
மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
இலக்கியத் திருவிழாக்கள்:
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டை நேரலையில் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR