தமிழகத்தில் ரூபாய் 235 கோடி மதிப்பீட்டில் அமைகிறது தொழில்நுட்ப பூங்கா...
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.
இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளர்ச்சியைப் போலவே, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இத்திட்டம் அமையும். இதனைச் சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வடபகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் அமையும். புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என, நாளைய உலகை நோக்கி தமிழ்நாட்டை அழைத்துச் செல்லும் தொலைநோக்குத் திட்டமாக இது அமையும்.
இந்நிகழ்ச்சியின் போது, டைடல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தொழில்துறை அமைச்சர் அவர்கள் எம்.சி. சம்பத் அவர்கள் வழங்கினார்.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் "கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்" (CORUS) என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.3.2020 அன்று அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இருப்பிடத்திலிருந்தே நேரடி தொடர்பின்றி இணையதளம் மூலம் விரைவாக 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6ரூ வட்டி மானியத்துடன் பிணை சொத்தின்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று, இன்று வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் இ.ஆ.ப, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா இ.ஆ.ப., டைடல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப, டைடல் நிறுவன மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்றனர்.