சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேட்டியில் அவர் கூறியதாவது:- 


எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


தற்போது தமிழக எம்.எல்.ஏக்கள் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தாங்கள் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று கவர்னரை சந்தித்துள்ளனர். இருவரும் சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சசிகலா, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளார். முதல்-அமைச்சரை சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கூறும் போது, எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வந்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். அப்போது அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா? அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் இருந்தார்களா? என்பது தெரியவரும். காலதாமதம் செய்யக் கூடாது என்பதே எங்கள் கருத்து என்று கூறினார்.


ஒருபுறம் பா.ஜனதா தலைவர்கள் கவர்னரின் காலதாமதம் சரிதான் என்று கூறுகின்றனர். மறுபுறம் சுப்பிரமணியசாமி சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு  கூறுகிறார். அவரது கருத்து பாஜக கருத்து அல்ல என்று கட்சியின் பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். பா.ஜனதா கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருக்கிறது.


காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்துக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவு இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கூறும் போது எங்களிடம் ஆதரவு கேட்பவர்களுக்கு எங்களது கட்சி எம்.எல்.ஏக்களிடமும், தேசிய தலைவர்களிடமும் ஆலோசித்து நிலைப்பாட்டை தெரிவிப்போம் என அவர் கூறினார்.