15வது நாளாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம்!!
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலைக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்.
கழுத்தில் தூக்கு கயிற்றை தொங்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சடலமாக நடித்து காட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சாப்பாட்டுக்கு கூட தங்களுக்கு வழியில்லை என்பதை உணர்த்தும் வகையில் எலிக்கறி சாப்பிட போவதாக கூறிய விவசாயிகள் எலியை வாயில் கவ்வியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2 வாரங்களையும் கடந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதில் இளைஞர்கள் அனைவரும் விவசாயிகளை காக்க ஒன்று கூட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்கிற பெயரில் தனியாக முகநூல் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகள், போட்டோக்கள், வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. இதனை பலர் பின்தொடர்ந்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகளை பெறுவதற்காக தனியாக வாட்ஸ்- அப் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.