கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த ஜனவரி 22 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசு, மாறாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தது. பலரை கைது செய்தது. அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் மிரட்டப்பட்டனர். எதற்கும் அஞ்சாத அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மாணவர்களின் நலன் கருதி 9 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.


போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற அரசு இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் அனைவரின் சஸ்பெண்ட் உத்தரவும் திரும்பப் பெறப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.