புதுடெல்லி: தமிழக அரசின் (Tamil Nadu Government) கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவின் (Aavin) தரமான, சுகாதாரமான பசும்பாலை மக்களுக்கு விநியோகித்து வருகிறது. அதில் கொழுப்பு நீக்கப்பட்ட டபுள் டோண்டு பால்பவுடர் (DOUBLE TONED), மூன்று சதவீதம் கொழுப்புள்ள கொண்ட டோண்டு, நான்கரை சதவீதம் கொழுப்புள்ள ஸ்டாண்டர்டைஸ்டு, 9 சதவீத கொழுப்புள்ள (Cholesterol) பால் (Milk) என ரக ரகமாக விற்று வருகிறது. இதில் ரசாயன கலப்பு இருக்காது என்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லாத் தரப்பினரின் உடல்நலத்துக்கும் ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் உடற்பசிக்குப் போக அறிவுப் பசிக்கும் இப்போது ஆவின் உணவளிக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதுதான் ஒரே பால்பையில் நான்கு வகை பாலைத் தருவது. இது என்னங்க லாஜிக் என்கிறீர்களா...?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் ஆவின் எடுத்துள்ள இந்த முன்முயற்சியால் சுத்தமான பசும்பாலுடன் தமிழ் முனிவன் திருவள்ளுவரின் முப்பாலும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கப்போகிறது.


ஆம். தாய்ப்பாலுக்கு நிகரான ஆவின் பால் நிரம்பிய பாக்கெட்களில் இனி தமிழுக்கு தந்தை நிகரான வள்ளுவனின் (Thiruvalluvar) அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பால் கொண்ட குறள் வரிகள் அச்சிடப்படும். அப்புறம் என்ன ஆவின் பால் வாங்கி இந்த நான்கு பாலையும் சுவைத்து மகிழுங்கள்.


இதுபற்றி தகவல்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், தமிழக பாஜக சோஷியல் மீடியா பிரிவுத் தலைவர் நிர்மல் குமாரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர்.


அதில், 'தமிழ்மொழியையும் திருக்குறளையும் உலக அரங்கில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.


திருக்குறளை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்க பல முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம், எல்லோர் இல்லத்திலும் திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்' என்று நிர்மல்குமார் குறிப்பிட்டுள்ளார்.


முயற்சி சிறிதெனினும் கீர்த்தி பெரியதுதானே... ஆவினை பாராட்டுவோம்!!