மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25 ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கொரோனா நோய்த் தொற்றினை தடுக்க நாட்டிலேயே முதன் முதலாக, தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. அதே போல, 15.4.2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13.4.2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். 


கொரோனா தொற்று ஏற்படாத படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 24.4.2020 மற்றும் 25.4.2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுள்ளது. மேலும், சமூக இடைவெளியை  கடைபிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.