வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார்!!
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.
சென்னை: கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
6-ம் தேதி காலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஒருவரது குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றிரவு அவர் சென்னை திரும்பி ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றும் வித்யாசாகர் ராவ் சென்னை வரவில்லை. டெல்லியில் இருந்து அப்படியே மும்பை சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. நேற்றும் வரவில்லை. இந்நிலையில் வித்யாசாகர்ராவ் நாளை பிற்பகல் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.