தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்து கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது. அமலுக்கு வந்த நாளன்று மட்டுமே சுமார் ரூ.8 கோடி வசூலாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன.


இதற்கிடையில், பஸ் கட்டண உயர்வால், கடந்த 20-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது; தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,509 பஸ்கள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட காரணங்களாலும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. 


இதனால், பேருந்துகளை முறையாக இயக்குவதற்குத் தேவையான வருவாயைக்கூட அரசுப் போக்குவரத்து கழகங்களால் ஈட்ட முடியவில்லை. பேருந்துகளை சிறப்பாகப் பராமரித்து இயக்குவதிலும் தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.


அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினமும் சராசரியாக ரூ.20 கோடி வசூலாகிறது. இதனால், வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளி நாளொன்றுக்கு ரூ.9 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த 20-ம் தேதி மொத்த வசூல் ரூ.28 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கட்டண உயர்வால் வசூல் தொகை ரூ.8 கோடி அதிகரித்துள்ளது.


இருப்பினும், கட்டண உயர்வால் கிடைத்த உண்மையான வசூல் தொகை எவ்வளவு என்பது ஒரு வாரத்துக்குப் பிறகே தெரியவரும். சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறையைத் தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களும் இன்று திறக்கப்படுகின்றன. அதனால், வசூல் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.