மக்களுக்கு சுமை வேண்டாம்! பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் ரத்து -முதல்வர் அதிரடி
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மக்களின் துன்பங்களை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பு குறித்த காலந்தாழ்ந்த பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமத கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களித்து, அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இந்த கட்டண விலக்கு குறித்து தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன.
துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200/- ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது.
பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில், இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு, கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசே ஈடுசெய்யும். இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு / இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR