HIV கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்: சுகாதாரத்துறை செயலர்
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தனியார், அரசு மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் சுமார் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 4 தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறு பரிசோதனை செய்ய விருதுநகர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று செய்தியளைகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "எச்.ஐ.வி விவகரம் மிகவும் மோசமான விஷயமாகத்தான் பார்க்கிறோம். இப்படி நடப்பது தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை. இதற்க்கு காரணமான ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுக்கு இந்த சிகிச்சையில் நம்பிக்கை இல்லையென்றால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். மேலும் இதுக்குறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனக்கூறினர்.