தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் தடையை போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-


தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.


சென்னையில் கோடம்பாக்கம், தியகாராயநகர், நந்தனம், கீழ்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, மடிப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். 


வட சென்னையில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இராயபுரம், காசிமேடு, பெரம்பூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. 


சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டுகிறது. இரவு நேரத்திலும் கடுமையான புழுக்கம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் திடீரென மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுவதை சகித்துக்கொள்ள முடியாது. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் சர்மா நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் மேலும் பல இடங்களிலும் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் நீண்ட நேரம் மின்வெட்டு சரி செய்யப்படாதது தமிழ்நாடு மின்வாரியத்தின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.


தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் வாரி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 


திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பகலில் 4 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வெட்டைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.


தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில் பராமரிப்பு காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. 


தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான பல அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. 4320 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின்சார வாரிய மின்னுற்பத்தி நிலையங்களில், 2185 மெகாவாட் அளவுக்குத் தான், அதாவது பாதி அளவுக்குத் தான் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 


இத்தகைய சூழலில், கிடைக்கும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்து நிலைமையை சமாளித்திருக்க வேண்டும்.


ஆனால், வல்லூர் அனல் மின் நிலையத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்தி விட்டது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் தடைபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். 


வல்லூர் மின்நிலைய நிர்வாகத்திடன் பேச்சு நடத்தி மின்சாரத்தை வாங்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ‘‘வல்லூர் மின்சாரம் தேவையில்லை... தனியார் மின்சாரம் குறைந்த விலையில் கிடைப்பதால் அதையும், காற்றாலை மின்சாரத்தையும் வாங்கி நிலைமையை சமாளிப்போம்’’ என்று மின்வாரிய அதிகாரிகள் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது அறிவார்ந்த செயலல்ல.


வல்லூர் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட் ரூ.5.35 என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. தனியாரிடம் ரூ.4.50 என்ற விலைக்குக் கூட மின்சாரம் கிடைக்கிறது என்றாலும், வல்லூர் மின்சாரக் கொள்முதலைக் கைவிடக் கூடாது. வல்லூர் மின்நிலையம் தனியாருக்கு சொந்தமானதோ, வணிக நோக்கம் கொண்டதோ அல்ல. தேசிய அனல் மின்கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தான் வல்லூர் மின் நிலையத்தை நடத்துகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் நினைத்தால் வல்லூர் மின்நிலைய நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி விலையை குறைக்க முயற்சிக்கலாம்; ஒப்பந்தப்படி பழைய விலையையே தர வேண்டும் என்றாலும் கூட அதன் ஒருபகுதி லாபமாக மின்சார வாரியத்திற்கு தான் வந்து சேரும்.


மாறாக வல்லூர் மின்சாரத்தை தமிழகம் வாங்க மறுத்ததால் அதன் இரு மின்னுற்பத்திப் பிரிவுகள் மூடப்பட்டிருக்கின்றன. வல்லூர் மின் நிலையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக வட்டிக்கு கடன் வாங்கித் தான் முதலீடு செய்திருக்கிறது. அப்படிப்பட்ட மின்நிலையம் உற்பத்தி செய்யாமல் முடங்கிக் கிடந்தால் பல வழிகளில் மின்சார வாரியத்திற்கு தான் இழப்பு ஏற்படும். இது தேவையற்றது.


வடசென்னையில் அமைந்துள்ள 1800 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையத்தில் இன்று காலை பழுது ஏற்பட்டதால் அங்கு மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. இது உடனடியாக சரி செய்யப்படாவிட்டால் மின்வெட்டு அதிகரிக்கும். எனவே, வல்லூர் மின்நிலையம் உட்பட எங்கெல்லாம் மின்சாரம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நியாயமான விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை போக்க தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.