கொரோனா எதிரொலியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் உடனே வழங்க தமிழக அரசு உத்தரவு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மத்திய ,மாநில  அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.


கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும்  வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.


இதையடுத்து, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் , மது கூடங்களுக்கு கை சுத்திகரிப்பான் வைக்கவும் அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்துமாறு மதுக்கடை  ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


மேலும், மதுக்கூடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் முக கவசம், கை  சுத்திகரிப்பான் ஆகியவை மதுக்கடை  ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 


மேலும், அனைத்து டாஸ்மாக், கடைகள், மதுக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம், சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.  


அதிகவிலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து TNLMCTS செயலி, 044-24321438 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், clmchennaitn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகாரளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.