போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரெடி: அமைச்சர்
போராட்டத்தில் இறங்கியிருக்கும் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். ஒரே பிரிவில் இருக்கும் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களை மூடக்கூடாது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இவர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, நேற்று தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேலானோரை கைது செய்தது. ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருதி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களின் கோரிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. போராட்டத்தில் இறங்கியிருக்கும் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.