பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உடனடியாக அரசு குறைக்க வேண்டும் - ஸ்டாலின்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு மேற்கொண்ட வரிக்குறைப்பு நடவடிக்கையை, தற்போதிய தமிழக அரசும் பின்பற்றி உடனே நடைமுறைப் படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ‘தினமும் விலை நிர்ணயம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் - டீசல் விலையை தினமும் உயர்த்தி மக்கள் மீது, குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையைத் தூக்கி வைத்துள்ளது.
அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், நடுத்தர மக்கள், சிறு - குறு தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உள்பட அனைவரும் தாங்க முடியாத துயரத்தைக் கடந்த மூன்றரை வருடங்களாக அனுபவித்து வருகிறார்கள்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் அதற்குத் துணையாக, வாய்மூடி மவுனியாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு கைமாற்றி அனுப்பி விட்டு கை கழுவுகிறது.
இது போன்றதொரு சூழ்நிலை உருவான போது, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்கும் பொருட்டு வரிகளைக் குறைத்தார்.
கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தபோலவே, தற்போது குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும், வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பதும், தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 70.96 பைசாவும், டீசல் ஒன்றுக்கு ரூ 60.04 பைசாவும் கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த தமிழக அரசுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.
எனவே தற்போது குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகளும் எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றி, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எடப்பாடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து, அவற்றின் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்