ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில்  வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக முறையீடு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. 


ஒன்பது மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாக்கல் செய்யும் போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 1,000 ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, 600 ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 200 ரூபாய், 'டிபாசிட்' கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தில், SC - ST பிரிவினருக்கு, 50 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், அதிகபட்சமாக, 1.70 லட்சம் ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், 85 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி தலைவர் வேட்பாளர், 34 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் மட்டுமே, தேர்தல் செலவாக செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த, 30 நாட்களில் செலவு விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளனர். திமுகவின் கோரிக்கையை ஏற்று இந்த முறையீட்டு மனுக்கள் மீது நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும். 4 பதவியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.