சென்னை: பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்களால் அதிமுக - பாஜக இடையே கடும் வாரத்தை போர் நடந்து வருகிறது. பாஜகவினர் தமிழக அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல பொன்.ராதாகிருஷ்ணன் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து சரிதான். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.


ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அதிமுக ஆட்சியில் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்தால் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் கோவத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்பொழுது அவரிடம் பொன்னார் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதிமுக அரசை குற்றஞ்சாட்டுவதை பொன். ராதாகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு விருது கவுரவித்துள்ளது. ஆனால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து  மத்திய அரசை எதிர்த்து பேசுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.


பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியால் தமிழக அரசை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா? கடந்த ஆட்சியில் ஐந்து வருடமாக மத்திய அமைச்சராக இருந்தபோது பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் என்ன செய்தார்? என்றும் கேள்விகளை எழுப்பினார். இவ்வாறு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.