முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் வருகின்றன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா ஆதரவு பெற்ற டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக-வுக்கு 2 அணி நிர்வாகிகளும் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னதாக அதிமுக-வும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடக்கப்பட்டது.


இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். 


இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை, எங்கள் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்றும், ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் கருத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார். 


அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக (அம்மா) சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால், நேற்று இரவு சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் அமைச்சர்கள் திடீரென கூடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 20-ம் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


வருமான வரி சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில், இரவு 11 மணி அளவில், அவரும் அமைச்சர் தங்கமணி இல்லத்திற்கு வந்தார். பின்னர், அங்கு நடந்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.


அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நேற்று இரவு நடந்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது:–


2 வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒன்று, கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து பேசினோம். மற்றொன்று, தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது பற்றி விவாதித்தோம். டிடிவி தினகரன் குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் பேசவில்லை.


ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அது வரவேற்கத்தக்க கருத்து. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எதிர்பார்ப்பது கட்சியை ஒற்றுமையோடு வழிநடத்துவது என்பதுதான். அதற்கு என்னென்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தோம்.


ஏற்கனவே, காலையிலே பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெளிவாக சொல்லிவிட்டார். அ.தி.மு.க.வை ஒற்றுமையோடு வழிநடத்த என்னென்ன செய்ய வேண்டுமோ, அது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஒற்றுமையாக ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். ‘‘ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும், இரட்டை இலை மீட்டெடுக்கப்பட வேண்டும்’’ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.


டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பாரா என்பது குறித்து ஒன்றும் விவாதிக்கப்படவில்லை. இது ரகசிய கூட்டமும் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் வரவேற்கத்தக்க கருத்தின் அடிப்படையில், அ.தி.மு.க. ஒற்றுமையோடு இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும்.


இவ்வாறு அவர் கூறினார்.