ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்ய வேண்டும்: தொல். திருமாவளவன் கோரிக்கை
ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மைய - மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மைய - மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுக்குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சார்ந்த நீலகண்டன் என்பவரின் மகள் கல்லூரிமாணவி இராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் 10-06-2019 அன்று குறுகியநேர இடைவெளியில் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. சமூக வலைத்தளமான முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தாம் இந்தத் துயரமான சாவுகள் என்பது தாளமுடியாத வேதனையாக உள்ளது.
இராதிகாவின் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த படமொன்றுக்கு இராதிகாவின் முகநூல் நண்பர்கள் அது குறித்துத் தமது கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் அதே ஊரைச்சார்ந்த பிரேம்குமார் என்பவரும் ஒருவர். ‘ இப்படியொரு படத்தைப் போடலாமா’ என்கிற வகையில் ‘ சீ.. ‘ என ஒரு கருத்தைப் பிரேம்குமார் பதிவிட்டதாகவும் அதனைக் கவனித்த இராதிகாவின் அக்கா உடனே பிரேம்குமாரை ‘ ஏன்டா நாயே..’ என்று பதிலுக்குப் பதிவிட்டதாகவும், இதனை இராதிகாவின் காதலரான விக்னேஷுவிடம் ‘இது சரியா’ என பிரேம்குமார் கேட்க, அதற்கு அவரும் பிரேம்குமாரைக் கண்டித்து எச்சரித்ததாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து பிரேம்குமாரின் தந்தை பன்னீர்செல்வம், இராதிகாவின் தந்தை நீலகண்டனிடம் போய் நேரில் கேட்க, இருதரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இராதிகாவின் தந்தை தனது இருமகள்களையும் பிறர் முன்னிலையில் ‘முகநூலில் பதிவிடும் பழக்கமெல்லாம் உங்களுக்குத் தேவையா’ என்று கண்டித்ததுடன், இருவரையும் கன்னங்களில் ஓங்கி அறைந்ததாகவும் தெரியவருகிறது.
இதன் பின்னரே, இராதிகா தனது இல்லத்திலேயே தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த தகவல் கிடைத்ததும் விக்னேஷும் துக்கம் தாளாமல் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாழவேண்டிய வயதில் இரு உயிர்கள் திடீரெனப் பலியாகும் ஒரு அவலநிலை, முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் நிகழ்ந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைத்தளங்களை முற்றாக இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மைய-மாநில அரசுகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், இராதிகா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் இழந்து வாடுகிற அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்து காவல்துறையினர் நேரிய வழிமுறைகளில் விசாரணை செய்து உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.