காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. 


தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக முழு அடைப்பில் கலந்து கொள்ளவில்லை. 


வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு அடைப்பில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள்.


ஆனால் நாளை வழக்கம் போல் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பலத்த பாதுகாப்புடன் நாளை பஸ்கள் ஓடும். தமிழகம் முழுவதும் பஸ் டெப்போக்கள் முன்பு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


முழு அடைப்பில் பங்கேற்காமல் கடைகளை திறந்து வைத்திருக்கும் வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்க சொன்னால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


இதேபோல பஸ் போக்குவரத்தை தடை செய்பவர்கள் மீதும் பஸ்களை சேதப்படுத்த நினைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 


முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அதிகாலையிலேயே அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.