2வது நாளாக தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி
தமிழகம் முழுவதும் 2_வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான ஊர்களில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை பழுதுபார்க்க மெக்கானிக்குகள் இல்லை. பழுது பார்க்காமல் பேருந்துகளை இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று முதல் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். எனினும், பேருந்துகள் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.