சென்னையில் விசாலமான ஏழுமலையான் கோயில் ஒன்றை கட்டுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஒய்.வி ரெட்டி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகம்.


சென்னையை எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல தினமும் 4 ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிற பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தில் திருப்பதி சென்றடைகின்றனர்.


இந்நிலையில் தமிழக மக்களின் சிரமத்தை குறைக்க, சென்னையில் விசாலமான ஏழுமலையான் கோயில் ஒன்றை கட்டுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. 


இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரெட்டி, "சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அதனால் சென்னையில் பெரிய ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்தாலோசித்த பிறகு விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறோம். ஏற்கனவே கன்னியாக்குமரியில் கோயில் கட்டியுள்ளோம். இருந்தாலும் சென்னையில் பெரிய மற்றும் விசாலமான கோயிலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான இடம் தேவைப்படும் பட்சத்தில் ஆந்திர முதலமைச்சர் தமிழக அரசிடம் பேசுவார்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் தலைவர் கிருஷ்ணா ராவ் தெரிவிக்கையில்., "சில வருடங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரிய கோவில் கட்டுவதற்கு சென்னையில் இடம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது நாங்கள் மீண்டும் இடத்திற்காக காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.