எழுவர் விடுதலையில் ஆளுநர் மெத்தனம் கண்டிக்கத்தக்கது -வேல்முருகன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாதிருப்தைக் கண்டித்து வரும் 9-ம் தேதி நடக்கும் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் எனற அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திடாதிருப்தைக் கண்டித்து வரும் 9-ம் தேதி நடக்கும் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் எனற அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சட்டப் பிரிவு 161-ன்கீழ் விடுதலை செய்ய, கடந்த 2018 செப்டம்பர் 6-ம் தேதியன்று உத்தரவிட்டது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. இதையடுத்து, தமிழ்நாடு அமைச்சரவை கூடி, சட்டப் பிரிவு 161-ன் கீழ் 7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஆறு மாதங்களாகியும் ஆளுநர் அத்தீர்மானத்தில் கையெழுத்திடாதிருக்கிறார்.
இடையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார்; அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று பதிலளித்தார். ஆனால் கையெழுத்திடவில்லை. இதனால், அவர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தினோம்; சிவகங்கையில் இருந்து எனது தலைமையில் மாபெரும் சைக்கிள் பேரணியும் நடத்தினோம். ஆனாலும் கையெழுத்திடவில்லை ஆளுநர்.
அதன் பிறகு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்; அதிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்றது. அதன் பிறகும் ஆளுநர் கையெழுத்திடவில்லை.
2018 டிசம்பர் 3-ம் தேதி மதிமுக தலைமையில் நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்றது. அப்போது “சட்டத்தை மதிக்காத ஆளுநர் அந்தப் பதவிக்கே தகுதியில்லாதவர்; தமிழ்நாட்டை விட்டே அவர் வெளியேற வேண்டும்; அல்லது ஒன்றிய அரசே அவரைத் திரும்பப்பெற வேண்டும்” என வலியுறுத்தியது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அப்போதும் ஆளுநர் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில், சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாநிலை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாநிலை தொடங்கினார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டு வருகிறார்.
ஆனால் தமிழக அதிமுக அரசோ இதைக் கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது. சட்டப்பிரிவு 161-ன்கீழ் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பிய அரசு, அதில் ஆளுநர் கையெழுத்திடாக பட்சத்தில், சட்டப்படி என்ன செய்திருக்க வேண்டும்? இரண்டாவது தீர்மானத்தை அனுப்பி, அவரைக் கையெழுத்திடவைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இது நயவஞ்சகமன்றி வேறென்ன?
சட்டப்பிரிவு 161-ன்கீழ் மாநில அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டாக வேண்டும்; ஆனால் 6 மாதங்களாகியும் அவர் கையெழுத்திடாதிருப்பது அரசமைப்புச் சட்டத்தையே மீறுவதாகும்; அவ்வளவு ஏன், இது தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, சட்டத்தையே மீறி ஆளுநரும் அரசும் நடப்பது தொடர்கிறது. தமிழர்களுக்கு இழைக்கும் இந்தப் பச்சைத் துரோகத்தைக் கண்டித்து வரும் 9-ம் தேதி நடக்கும் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அனைவரையும் அதில் பங்கேற்க அழைக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.