இரட்டை இலை சின்னம் யாருக்கு? வரும் 15-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை வரும் மார்ச் 15 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்ததையடுத்து தாங்களே உண்மையான அதிமுக என்று கூறிக்கொண்டார்கள்.
இதனையடுத்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு 2017 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக டிடிவி தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதமும் முடிவடைந்ததாகக் கூறிய நீதிபதிகள் வழக்கின் இறுதி தீர்ப்பை பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கினார்கள். அதில் இரட்டை இலைச் சின்னம் இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு தான் சொந்தம். தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் தவறு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி இரட்டை இலைச்சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தது.
இந்தநிலையில், இரட்டை இலை சம்பந்தமான வழக்கை வரும் மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் டிடிவி தினகரன் தரப்பில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம். வரும் 15 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் எனக் கூறியது.