மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள், பெண்கள் இருசக்கர வாகன பேரணி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து 'காவிரி அமைப்பு' போராடி வருகிறது. அந்த வகையில், நேற்று காவிரி அமைப்பின் சார்பில் பிரமாண்டமான இருசக்கர வாகன நடைபெற்றது.


மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு...


குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில், மங்கைநல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொடங்கிய இருசக்கர பேரணியில், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வணிகர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக வந்து கலந்து கொண்டனர். மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் புறப்பட்டனர்.


குத்தாலத்தில் இருந்து தொடங்கிய பேரணியில், காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் பங்கேற்றார். அவரது தலைமையில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் ஐநூறு பேர் பங்கேற்றனர். வழிநெடுகிலும் திரண்டிருந்து பொதுமக்கள் உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் கோமல் அன்பரசனுக்கு பொன்னாடை அணிவித்து, தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், வைத்தீஸ்வரன் கோயில், மங்கைநல்லலூர் பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனப் பேரணியிலும் சாரை சாரையாக ஆர்வமுடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வரும் வழியில், மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டியதன் காரணத்தை பொதுமக்களிடம் கூறியதோடு, துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.


ஜெ., வாக்குறுதியை நிறைவேற்றுக...


மூன்று இடங்களில் இருந்தும் மயிலாடுதுறையை நோக்கி வந்த இருசக்கர பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தபோது ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வாழ்த்தினர். இறுதியாக பேரணி நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படாததால், கடந்த கால் நூற்றாண்டு காலமாக மக்கள் வஞ்சிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இனியும் இத்தகைய நிலை தொடரக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, தற்போதைய அதிமுக அரசு அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு இதுவே சரியான தருணம் எனவும் கோமல் அன்பரசன் வலியுறுத்தினார். பின்னர், அவரது தலைமையிலான 'காவிரி அமைப்பின்' குழுவினர், நகராட்சி ஆணையரிடம், மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.