விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டி கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த மாதம் 21-ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.


இந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோர் தங்கள் கட்சி தலைமையகத்தில் விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்  பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கவுதம சிகாமணி, அண்ணா அறிவாலயத்தில் இந்த விருப்ப மனுவை அளித்துள்ளார்.


எனவே, விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேபோல் நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.