அது 2004-ம் ஆண்டு. முதல்வர் ஜெயலலிதா தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், கீதை வழி நடப்போம் என்று கூறியிருந்தார். இதற்கு கலைஞர் கருணாநிதி கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். உலகப் பொதுமறையான திருக்குறள் குறித்து எப்போதும் வாயே திறக்காத ஜெயலலிதா, பகவத் கீதையைப் பொதுமறை என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தார் கருணாநிதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் திடீரென கலைஞரின் கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்திறங்கினார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். அதற்கு முதல் நாள்தான் பகவத் கீதையை விமர்சித்திருந்தார் கருணாநிதி.  முன் தகவல் சொல்லாமல் வந்தாலும் இராம.கோபாலனை வாசல் வரை வந்து வரவேற்று கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றார் உதவியாளர் சண்முகநாதன். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர்.


‘‘பகவத் கீதை பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என நேருக்கு நேர் கூறிய இராம.கோபாலன், ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ‘பகவத் கீதை’ நூலை அவருக்குப் பரிசளித்தார். புன்னகையுடன் பெற்றுக்கொண்டார் கருணாநிதி. பதிலுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ நூலை எடுத்து இராம.கோபாலனுக்கு வழங்கினார். இருவரும் சிரித்துக்கொண்டார்கள். இதுதான் கருணாநிதி. கொள்கை ரீதியாக எதிரெதிர் முனையில் இருப்பவர்கள்கூட அவரை எப்போதும் எளிதில் சந்திக்க முடியும். நேருக்கு நேர் விமர்சிக்க முடியும்.



இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகத்தின் வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் எழுத முற்பட்டால் அதில் மறுக்கவோ, மறைக்கவோ இயலாத தலைஞர் கலைஞர் கருணாநிதி. இன்று கலைஞர் கருணாநிதிக்கு 99-வது பிறந்த நாள். வார்த்தைகளுக்குள் அடக்க இயலாத அவரது நெடிய வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி முத்துவேல் - அஞ்சுகம் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் கருணாநிதி. பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை எனத் தமிழின் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், தனது 14-வது வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே” என்ற அவரது முழக்கம் 80 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 


தனது பள்ளிப்படிப்பைக் கைவிட்ட 17 வயதில், ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கலைஞருக்கு, 1940-களில் பேரறிஞர் அண்ணாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது. 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை அண்ணா தொடங்கியபோது, கலைஞரும் அவருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினார். 1957-ம் ஆண்டு திமுக முதல் முறையாகத் தேர்தல் களம் கண்டபோது, குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கலைஞர் கருணாநிதி. அன்றில் இருந்து 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை 13 தேர்தல்களில் போட்டியிட்ட அவர் எதிலுமே தோல்வியடைந்ததில்லை.   



1969-ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற கலைஞர் கருணாநிதி, 5 முறை தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மத்தியில் கூட்டாட்சி,  மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுத்த கலைஞர், மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர். எமர்ஜென்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே முதல்வர் கருணாநிதியே. 


நில உச்சவரம்பை 15 ஏக்கராகக் குறைத்தது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்தது, நீராடும் கடலுடுத்த பாடலை மாநில வாழ்த்துப்பாடலாக அறிவித்தது, பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உயர் கல்வியில் சலுகை போன்ற பல திட்டங்கள் கலைஞரின் சமூக நீதிச் சிந்தனைக்கு சான்றாய் உள்ளவை.



மெட்ரோ ரயில் திட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம், கத்திப்பாரா மேம்பாலம், புதிய சட்டமன்றத்துக்காகக் கட்டப்பட்டு தற்போது பல்நோக்கு மருத்துவமனையாக நிற்கும் ஓமந்தூரார் வளாகம் என சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்தியவர் கலைஞரே. 


ஒரு தலைவனுக்கான முக்கியத் தகுதியில் எதிர்காலம் குறித்த முற்போக்கான சிந்தனையும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியை முன்கூட்டியே அறிந்த கலைஞர் நாட்டிலேயே முதல் முறையாக 1997-ம் ஆண்டிலேயே அத்துறைக்கான கொள்கையை அறிவித்தார். தமிழகம் அறிவித்த ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியானது. ‘டைடல் பார்க்’ மூலம் நிறுவனங்களை இங்கு ஈர்த்ததோடு, அங்கு வேலைவாய்ப்புகளுக்கு நம் மாணவர்களைத் தயாராக்கும் வகையில் உயர் கல்வித் துறையையும் முடுக்கிவிட்டார் கருணாநிதி. 


மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?


மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என மத்திய அரசு இப்போதும் வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதனை எப்போதோ தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியதோடு, அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீட்டையும் அவர் பெற்றுக்கொடுத்தார். சமூக நீதியில் கலைஞரின் பங்கைப் பேச தனிப் புத்தகமே தேவைப்படும். 


கலைஞரின் அரசியல் பாணி தனித்துவமானது. தங்களது கொள்கையைப் பெரிதாகக் கூற பிறக் கொள்கைகளைத் தாழ்த்துவதே அனைவரது வழக்கம். ஆனால், கலைஞரோ ராமாயணம், மகாபாரதத்திற்குப் பதிலாக திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் உயர்த்திப் பிடித்தார். சீதைக்கு மாற்றாய் கண்ணகியை முன் நிறுத்தினார். மொழி அரசியலைக் கையாள கலைஞரைப் போல் இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.



எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவு எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடுவது கலைஞரின் வழக்கம். அரசியலில் இடையறாப் பணிகளுக்கு இடையே எழுதுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். 12 வயதில் நாடகங்களை எழுதத் தொடங்கியவர் தனது 92-வது வயதிலும் இராமானுஜர் எனும் தொலைக்காட்சித் தொடருக்காக கதை, வசனம் எழுதினார். திருநங்கை, கைம்பெண் என்ற வார்த்தைகளைக் கலைஞரைத் தவிர வேறு ஒருவராலும் தந்திருக்க இயலாது. தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் திரை வாழ்விலும் கலைஞரின் வசனங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. 


திராவிட இயக்கத்தின் கருத்துகளைத் திரைப்படங்கள் வாயிலாக பொதுமக்களிடையே வலுவாகக் கொண்டுசேர்த்தார் கலைஞர். பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனம், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், மூட நம்பிக்கைகளையும் பொட்டில் அடித்தாற்போல் கூறியது.


தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் என்ற பராசக்தி திரைப்பட வசனம் போல, கலைஞரின் வாழ்வு பல இடர்களையும் கண்டுள்ளது. கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரியைச் சந்தித்து கருணாநிதியின் மீதான ஊழல்களைப் பட்டியலிட்டுப் புகார் கொடுத்தார். அப்போதைக்கு அந்தப் புகாரைக் கிடப்பில் போட்ட இந்திரா காந்தி அரசு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக உடனான மோதலைத் தொடர்ந்து அந்தப் புகாரைத் தூசுத் தட்டி எடுத்தனர். அது குறித்து விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க இயலவில்லை என்றே சர்க்காரியா கமிஷன் அறிக்கை சமர்ப்பித்தது. 


2001-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு பொறுப்பேற்ற உடன், ஜூன் 20-ம் தேதி மேம்பால ஊழல் புகாரில், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி, நடு இரவில் கைலியுடன் கைது செய்யப்பட்டார் கருணாநிதி. அரசியல் பழிவாங்கலாகப் பார்க்கப்பட்ட இந்தக் கைது அப்போதைய காலக்கட்டத்தில் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 



அதே போல, 2-ஜி ஊழலில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைதாகினர். இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் இருவரும் விடுதலை செய்யப்பட்டாலும், 2-ஜி வழக்கு அரசியல் ரீதியாக கருணாநிதிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.  அடுத்து வந்த பொதுத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியைச் சந்திக்க இதுவும் காரணமாக அமைந்தது. 


சிறு வயது முதலே போராட்ட குணத்தைக் கொண்டவரான கலைஞர், பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் மறுத்ததால், எதிரே இருக்கும் குளத்தில் விழுந்துவிடுவேன் எனப் போராடிப் பள்ளியில் சேர்ந்தார். இந்தப் போராட்ட குணம், அவரது மரணத்திற்குப் பின்னும் நீடித்தது. உடல்நலக் குறைவால் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். அண்ணாவிற்கு அருகிலேயே தனது சமாதி அமைய வேண்டும் எனக் கலைஞர் விரும்பிய நிலையில், அப்போதைய அதிமுக அரசு அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது....


ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகங்களுடன்...



கடந்த 70 ஆண்டு தமிழக வரலாற்றைக் கருணாநிதியின் வரலாற்றைப் பிரித்துவிட்டு எவராலும் எழுத முடியாது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என அனைத்துப் பிரதமர்களுடனும், பெரியார், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என எல்லா அரசியல் தலைவர்களுடனும் அரசியல் செய்தவர் கருணாநிதி. ஒருபுறம், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரது அரசியல் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், மறுபுறத்தில் கருணாநிதி கடந்த 80 ஆண்டுகளாக அப்படியே நின்றார் என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. 



 


மேலும் படிக்க | இந்தி திணிப்பை எதிர்ப்போம் - கலைஞர் சிலையில் இடம்பெற்றிருக்கும் மாஸ் கட்டளைகள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR