தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் வெடித்துள்ளது. குறிப்பாக இந்தியர்களின் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து, பொருள்களைச் சூறையாடி வருகின்றார்கள். அவர்களை பாதுகாக்க தேவையான நவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அதுக்குறித்து ஒரு அறிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது அறிக்கையில் கூறியதாவது, 


தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, 1999 ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கிய போது, 2 பில்லியன் டாலர் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


ஆனால், "கொரோனா காலத்தில் சிறையில் அடைத்து, என்னைக் கொல்ல முயற்சிக்கின்றார்கள். எனவே, நான் கைதாக மாட்டேன்" என அவர் அறிவித்தார். தண்டனையை ஒத்தி வைக்கக் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால், ஜூலை 7 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.


"அவர் குற்றம் அற்றவர். தற்போதைய ஆட்சியாளர்கள் அவரைப் பழிவாங்க முயற்சிக்கின்றார்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும்" எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடைகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து, பொருள்களைச் சூறையாடி வருகின்றார்கள். அங்கு கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


இந்தத் தாக்குதல்களால், அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்குச் செய்திகள் வந்தன.  


எனவே, அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என, ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.


இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR