அன்னபூர்ணாவில் நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை... வானதி கொடுத்த தீடீர் விளக்கம்!
Coimbatore Latest News: ஓட்டலில் ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொதுவெளியில் பகிர்வது சரியா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
Vanathi Srinivasan Explanation On Coimbatore Issue: அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீனிவாசன்தான் நேரம் கேட்டார் என்றும் அவரை யாரும் மிரட்டவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ வானதி விளக்கம் அளித்து உள்ளார்.
கோவையில் சிறு, குறு தொழில் முனைவோர்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனை நோக்கி பேசுகையில், "ஒவ்வொரு பொருட்களுக்கும் வித விதமாக ஜிஎஸ்டி போட்டு தருவது பிரச்சனையாக உள்ளது. பன்னிற்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால், அதில் கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வருகிறது. ஜி.எஸ்.டி போடுவதில் கணினியே திணறுகிறது. வானதி கூட எங்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு, வரி குறித்து கேட்டு இருக்கிறார்" என அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் நேரில் மன்னிப்பு கோரினார். சீனிவாசன் மன்னிப்பு கேட்டு பேசியதை வீடியோ எடுக்கப்பட்டு, அதை இணையத்தில் பாஜகவினரால் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில்,'நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தான் கேள்வியை முன் வைத்தேன். அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் உங்களை நிச்சயம் புண்படுத்திவிட்டேன். நீங்கள் பெரியவர், என்னை மன்னித்துவிடுங்கள்' என அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசியிருந்தார். இவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அன்னப்பூர்ணா உரிமையாளரை நிர்பந்தித்து மன்னிப்பு கேட்கவைத்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளனர் என எதிர்க்கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோரும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தது மட்டுமின்றி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர்,"தனது ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா...? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை. பேசும்போது நான் சாப்பிடாததை எல்லாம் அவர் கூறினார்.
அவர் பேசியதற்கு அடுத்த நாள் காலையில் என்னை தொடர்புகொண்டு மன்னிப்பு தெரிவித்தார். மேலும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேரம் கேட்டு கோரிக்கை வைத்தார். மேலும் மத்திய அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டார் தனது தவறுகளை ஒப்புக்கொண்டார். நான் ஆர்எஸ்எஸ் சார்ந்தவன் என்று பல்வேறு விஷயங்களை மத்திய நிதி அமைச்சரிடம் அன்னபூர்ண உரிமையாளர் சீனிவாசன் பேசி உள்ளார். நாங்கள் யாரையும் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கவில்லை. வேண்டும் என்றால் நேரடியாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனிடம் போய் கேளுங்கள்" என்றார்.
முன்னதாக, அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ பாஜகவினரால் வெளியானதற்கு பாஜக தரப்பில் இருந்து மன்னிப்பு கோருவதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது X தளத்தில் பதிவிட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ