ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்!
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நடப்புக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாவைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி சட்டமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
திரு.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவரது தலைமையிலான அரசு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.
நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆவதற்குள்ளாக கொங்கு மண்டலத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று வர்ஷினி பிரியா, கனகராஜ் ஆகிய இருவரும் கத்தியால் வெட்டப்பட்டனர். கனகராஜின் சகோதரர் வினோத் என்பவரே அவர்களை வெட்டியிருக்கிறார். வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார் என்பதற்காக கனகராஜை வினோத் வெட்டியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் உயிரிழந்துள்ளனர்.
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்திய சட்ட ஆணையம் ஒரு சட்ட மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளது. அந்த மசோதா அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு அதை சட்டமாக்கவே இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசே கூட இதற்கான சட்டத்தை இயற்ற முடியும். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு சாதிவெறியர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்; இனியும் காலந்தாழ்த்தாமல் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றவேண்டும் என வலியுறுத்துகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.