புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறுக -தொல்.திருமா!
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... மக்கள் நலத்திட்டங்களை செல்படுத்தவிடாமல் தடுக்கும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு அறவழியிலான முற்றுகைப் போராட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நலனுக்கான அவர்களது போராட்டம் வெல்லட்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம் . ஆளுர் மூலமாக மறைமுக ஆட்சி நடத்த முயலும் மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம்.
இலவச அரிசி திட்டம், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நிவராணம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கும் திட்டம், கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட 39 மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முடக்கிவைத்துள்ளார். இதனால், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு புதுச்சேரியின் வளர்ச்சியே தடைபட்டு இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும் என கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கும் ஆளுநர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில்தான் புதுச்சேரி முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் ஆளுநர் மாளிகையின் முன்னால் சாலையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச்சிறுத்தைகளும், களத்தில் உள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி செயல்படவிடாமல் தடுக்கும் மோடி அரசாங்கத்தின் முகவராக செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு உடனே திரும்பப்பெறவேண்டும் எனவும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் புதுச்சேரி முதல்வரின் அறப்போராட்டம் வெல்க என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வாழ்த்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.