‘மின்வேலி இருக்கு. பாத்து போங்க சாமீ’ - யானைகளுக்கு அறிவுறுத்திய விவசாய குடும்பத்தினர்!
மின்வேலியை பத்திரமாக தாண்டுமாறு யானைகளுக்கு அறிவுறுத்திய விவசாய குடும்பத்தினரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
காடுகளின் அரசன் என வர்ணிக்கப்படும் யானையின் நிலை தற்போது மிகுந்த பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவுக்காக ஊருக்குள் இறங்கி வரும் யானைகளைக் கத்தி, வேல்கம்பு கொண்டு மனித இனம் துரத்தி வருகிறது. மேலும், மின்சார வேலிகளைப் பொருத்தி யானைகளைக் கொல்வது, அவுட்டுக்காய் வைத்து யானைகளை நாசமாக்குவது என யானைகள் மீதான மனித இனத்தின் வெறுப்புச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. தந்தத்திற்காக வேட்டையாடப்படுவது, ரயில்வே ட்ராக்கில் அடிக்கடி விபத்தில் சிக்குவது, சாலைகளில் வாகனங்களால் ஹாரன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது என நாளுக்குநாள் யானைகள் மீதான கொடுமைகளை மனித இனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க | தண்ணீர் குடிப்பதிலும் தனி ஸ்டைல் காட்டும் யானைக்குட்டி! வைரல் வீடியோ!
பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை, ‘யானைகள் அட்டகாசம்’, ‘யானைகள் செய்த அட்டூழியம்’ போன்ற சொற்றொடர்களை சில ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. இதனால் பொதுச்சமூகத்தில் யானைகள் மீதான பிம்பம் மேலும் மோசமடையும் சூழல் உருவாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல், காட்டிற்குள் வாகனங்களை துரத்தும் யானைகள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன. இதனை காணும் வளரும் குழந்தைகள், யானையை ஒரு மோசமான மிருகமாக கட்டமைத்துக் கொள்ளும் ஆபத்துகளும் நிகழ்கிறது. விலங்குகளுடனான மனித இனத்தின் சண்டை மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டும் காலத்துக்கு வந்துள்ளோம் என்று தோன்றும் அளவுக்கு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | யானைக்குப் பிடித்த ‘மதம்’ - 5 மணி நேரம் பாகன்கள் போராட்டம்
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் எப்போதும் யானைகளை அரக்கத்தனத்துடன் விரட்டும் விவசாயிகள் மத்தியில், மின்வேலியில் சிக்கி யானைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அங்குள்ள விவசாயிகள் அக்கறையுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் உலவி வருகின்றன. திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அந்த யானைகள் புகுந்தன. உடனடியாக நரசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள ஆனந்தன் என்பவரது விவசாய நிலத்தின் வழியாக யானைகள் வந்ததன. அந்த தோட்டத்தில் மின் வேலி இருப்பதைப் பார்த்த விவசாயிகள் சிலர், ‘அந்த வழியாக மின்வேலி இருக்கு. பாத்து போங்க சாமீ’ என்று அன்போடு அறிவுறுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, ‘மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைக் கூட்டம் தற்போது பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ளது. இதில் 2 மாத ஆண் யானை குட்டி ஒன்றும் உள்ளது’ என்று தகவல் தெரிவித்தனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR