வினுபிரியா தற்கொலை: ஒருதலை காதல் இளைஞர் கைது
வினுபிரியா தற்கொலை வழக்கில் சுரேஷ் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக சேலம் மாவட்ட எஸ்பி அமித்குமார் சிங் தெரிவித்தார். அந்த இளைஞர் விசைத்தறித் தொழிலாளராக இருந்து வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் வினுபிரியாவை தான் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும். தனது காதலைப் புறக்கணித்த வினுபிரியாவை அவமானப்படுத்தவே அவ்வாறு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.மேலும் வினுபிரியாவின் தந்தை அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான இரண்டு போலீஸ்காரர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் வினுப்பிரியா. இவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ள படத்தை எடுத்து ஆபசமாக சித்தரித்து அதனை அவரது பக்கத்திலேயே வெளியிட்டு உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா, இது குறித்து வீட்டில் தெரிவிக்க, இது தொடர்பாக அவரது பெற்றோர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து மற்றொரு ஆபாசப் படத்தை இன்று பதிவேற்றியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினுப்பிரியா, இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.