விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- சிறார்கள் 4 பேருக்கும் ஜாமீன்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை கடந்த 29ஆம் தேதி 6 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்தனர். 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விசாரணை நிறைவு பெற்றது. நான்கு பேரிடம் 6 நாட்களாக கூட்டாகவும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து குறுக்கு விசாரணையும், பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை கோணங்கள் :
செல்போன்களை ஆய்வு செய்தது, சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரியவந்தது. செல்போன்களை ஆய்வு நடத்தியதன் அடிப்படையிலும் 4 பேருடைய சக நண்பர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வாக்குமூலமாக சிபிசிஐடி பெற்றுள்ளது.விசாரணை நடத்தியதை வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் ஏபரல் 1ம் தேதி 4மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது.
ஜாமீன் :
இந்நிலையில் சிறார்கள் 4 பேரையும் விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏப்ரல் 7ஆம் தேதி உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை, இராமநாதபுரம் கூர் நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு விருதுநகர் இளஞ்சிறார் நீதிக்குழுமம் நீதிமன்றத்தில் நீதிபதி மருது பாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.