புது டெல்லி: எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது என இந்தி நடிகர் விவேக் ஓபராய், கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.


கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது சமூக வலைத்தளத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, அன்புள்ள கமல் சார், நீங்கள் ஒரு பெரிய சிறந்த கலைஞர். எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது. கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறலாம். ஆனால் ஏன் "இந்து" என குறிப்பிட்டீர்கள்? நீங்கள் வாக்கு சேகரித்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்காக? 


மிகச்சிறிய ஒரு நடிகனிடம் இருந்து ஒரு பெரிய கலைஞருக்கு வேண்டுகோள். தயவு செய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம், நாம் அனைவரும் ஒன்று தான். ஜெய்ஹிந்த்.


இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.