VK Sasikala 2021 ஜனவரி 27 அன்று விடுதலை ஆகிறார்: RTI மூலம் தகவல்!!
முறைகேடான சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரான வி.கே.சசிகலாவின் விடுதலை குறித்த கேள்விக்கு சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்
சசிகலா விடுதலை (Sasikala Release) குறித்த ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) கேள்விக்கு அவர் இருக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திடமிருந்து பதில் வந்துள்ளது.
ஆரம்ப அறிக்கையின்படி, பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற ஒருவர் எழுப்பிய RTI கேள்விக்கு (RTI Query) பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். முறைகேடான சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரான வி.கே.சசிகலாவின் (VK Sasikala) விடுதலை தேதிக்கு இது ஒரு பதிலாக வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில், முழு அபராதத் தொகையான 10 கோடியை செலுத்தினால், சசிகலா ஜனவரி 27, 2021 அன்று விடுதலையாகக் கூடும் என்றனர். இதை செய்யத் தவறினால், அவரது சிறைத்தண்டனை தீர்ப்பின் படி முன்பிருந்த கால அளவிற்குத் தொடரும். அந்த நிலையில் அவரது விடுதலை பிப்ரவரி 27, 2022 க்கு ஒத்திவைக்கப்படும்.
ALSO READ: வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?
மேலும், பரோல் வசதியைப் பயன்படுத்தினால் அவர் விடுதலை செய்யப்படும் தேதி மாறுபடலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, வி.கே.சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துரா பாண்டியன் செப்டம்பர் இறுதிக்குள் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தார். அவர் சிறைவாசம் அனுபவிக்கும் போது அவரது நன் நடத்தை காரணமாக, அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறையான அறிவுறுத்தலுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என்று செந்தூர பாண்டியன் மேலும் கூறினார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு தமிழகம் சட்டசபை தேர்தல்களை (Tamil Nadu Assembluy Elections) சந்திக்கவுள்ள நிலையில், சசிகலாவின் விடுதலைக் குறித்த செய்திகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) மறைவிற்குப் பிறகு, அதிமுக-வின் மிகப்பெரும் புள்ளியாக பார்க்கப்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றதால், அக்கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது அவர் மீண்டும் வரும் பட்சத்தில், யாருடைய நிலைப்பாடு எப்படி மாறும் என்பதை பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ALSO READ :‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!