பொதுமக்கள் நலன் கருதியும், மாநிலத்தில் நிலவும் “சுகாதார நெருக்கடி” கருதியும் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று தமிழக சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என மு.க.ஸ்டாலின்  அவர்கள் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-



ஒரே நாளில் பள்ளி மாணவி உள்ளிட்ட 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருக்கிறார்கள், என்ற அதிர்ச்சித் தகவல் இதயத்தை நடுங்க வைக்கிறது. செயலிழந்த ஆட்சியால் இன்றைக்கு மாநிலத்தின் சுகாதார நிலைமை சகஜநிலைக்கு திரும்ப முடியாத அளவுக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 


எதிர்காலக் கனவுகளுடன் வளர்ந்து வரும் மாணவ - மாணவியர் - குழந்தைகள் என்று அனைத்து தரப்பினரும் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆங்காங்கே குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிறார்கள்.


குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிவாஷினி, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவன் சிவகார்த்தி ஆகியோர் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.


ஆனால், ‘குதிரை பேர’ அரசோ உயிரைப் பறிக்கும் காய்ச்சலைக் கூட தடுக்க முடியாமல் தத்தளித்து நிற்கிறது.


பள்ளி மாணவ – மாணவியரை அழைத்துச் சென்று மணிக்கணக்கில் கால்கடுக்க நிற்க வைத்தும், நூறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டிய தாய்மார்களை வலுக்கட்டாயமாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்றும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஆடம்பரமாகக் கொண்டாடுவதற்கு, அரசு பணத்தை கோடி கோடியாக வாரி இரைக்கும் இந்த கேடுகெட்ட அரசு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திடும் நிர்வாக திறமை இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.


டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை. பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. 



ஆனால், “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப்பிடிப்பான்”, என்பது போல் இந்த ‘குதிரை பேர’ அரசு விளம்பர மோகத்திலும், வீண் செலவுகளிலும், வீராப்புப் பேச்சுகளிலும் கவனம் செலுத்துகிறதே தவிர, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியாமல் தடுமாறி நிற்கிறது.


“கொசு ஒழிப்பிற்கு 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது”, என்று ‘குட்கா’ அமைச்சரும், அவருக்குத் துணைப்போகும் அரசு சுகாதாரத்துறை செயலாளரும் கூறி வந்தாலும், ஊடங்களில், “டெங்கு பரப்பும் கொசுவை ஒழிக்க முடியாததற்கு தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதே காரணம்” என இன்று வெளி வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.


‘நீட்’ தேர்வில் பொதுமக்களையும் மாணவ, மாணவியரையும் நம்ப வைத்து, கழுத்தை அறுத்தது போல், டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்தும் குறிப்பிட்டு சுகாதாரத்துறையின் செயலாளர், அமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் இணைந்து ஒரு மோசடி நாடகத்தை நடத்தி, இன்றைக்கு தமிழக மக்களை டெங்கு பீதியில் உறைய வைத்துள்ளார்கள்.


ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, தினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாக மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும், ‘விழா கொண்டாட்டங்களில்’ மட்டும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கவனம் செலுத்துவதால், மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, மாநிலத்தில் தினமும் மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணமான டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


‘விழா கொண்டாட்டங்களில் மட்டும் ஈடுபட்டு - அரசு நிர்வாகத்தில் கோட்டை விட்டு’, அரசு இயந்திரத்தை முழுதாக முடக்கி வைத்துள்ள ஒரு முதலமைச்சர் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதியும், மாநிலத்தில் நிலவும் “சுகாதார நெருக்கடி” கருதியும் மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


என தெரிவித்துள்ளார்