கொரோனாவை விரட்ட நம்மால் முடியும்: தேவை மக்களின் ஒத்துழைப்பு மட்டுமே: PMK
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட நம்மால் முடியும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட நம்மால் முடியும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோரைத் தாக்கி வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா நடத்தும் சூறையாடல்கள், அமெரிக்காவிலிருந்து எழும் அலறல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்திய மக்களிடையே பெரும் அச்சம் எழுந்திருப்பதை மிக நன்றாக உணரமுடிகிறது.
இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் வரலாற்றைப் பொறுத்தவரை நேற்று ஒரு கருப்பு நாள். நேற்று ஒரு நாளில் மட்டும், இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 132 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். நேற்றிரவு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,119 ஆக உயர்ந்திருந்தது. இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, புதிய வேதனை வரலாறுகள் படைக்கப்படலாம். கடந்த சில நாட்களுக்கான வரலாறு அதைத் தான் நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நாளான ஜனவரி 30-ஆம் தேதிக்குப் பிறகு 45 நாட்கள் கழித்து மார்ச் 14-ஆம் தேதி தான் கொரோனா பாதிப்பு 100-ஐத் தொட்டது. ஆனால், அடுத்த 9 நாட்களில், ஒரு நாளைக்குச் சராசரியாக 44.44 பேர் வீதம் அதிகரித்து 500 என்ற எண்ணிக்கையை எட்டியது. அதன்பின் 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிக வேகத்தை அடைந்து விட்டது என்பதை இந்த புள்ளி விவரங்கள் விளக்கும்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த இப்புள்ளி விவரங்கள் மக்களுக்கு அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தலாம். கொரோனா வைரஸ் குறித்த இன்றைய சூழல் அச்சப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும் இது நம்பிக்கை இழக்க வேண்டிய தருணம் அல்ல. 20-ஆவது நூற்றாண்டிலும், 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவைத் தாக்கிய ஏராளமான பெருந்தொற்று நோய்களை நாம் திறம்படச் சமாளித்து வெற்றி கண்டிருக்கிறோம். இதற்கு ஏராளமான நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக முன்வைக்க முடியும்.
இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் லட்சக்கணக்கானோரைப் பலி கொண்ட கொள்ளை நோயான பிளேக் 1930-ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால், 1994-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தில் ஏராளமான கால்நடைகளும், எலிகளும் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சூரத் பகுதியில் மீண்டும் பிளேக் நோய் தோன்றியது. அடுத்த சில நாட்களில் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களுக்கும், பெரும்பான்மையான மாநிலங்களுக்கும் பரவியது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பிளேக் நோய் தாக்கியது. ஆனாலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக 49 உயிரிழப்புகளுடன் அந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால், ஒட்டுமொத்த கிழக்கு, மேற்கு, வடக்கு இந்தியா நிம்மதியடைந்தது.
2005-06 ஆம் ஆண்டில் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவியது. அப்போது மத்திய சுகாதாரத்துறை பரிந்துரையின் அடிப்படையில் அந்த மாநிலங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டு, நோய் ஒழிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட மின்னல் வேக நடவடிக்கைகளின் காரணமாக உயிரிழப்பே ஏற்படாமல் தடுக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவிய பன்றிக் காய்ச்சல், 2001 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிபா காய்ச்சல், சீனாவிலிருந்து பரவிய சார்ஸ், மெர்ஸ் போன்ற கொரோனா வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை இந்திய மருத்துவ வல்லுனர்கள் பெரிய உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தினர். இந்தியாவின் இந்த திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்தியாவில் இப்போது பரவி வரும் கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது, அந்த நோய்கள் வீரியம் குறைந்தவை தான் என்றாலும் கூட, அவை பரவிய காலத்தில் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை. கடந்த காலங்களைப் போலவே இப்போதும் இந்திய மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையின் மூலம் கொரோனா வைரஸ் சவாலை முறியடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியாவில் ஒவ்வொரு முறை பெருந்தொற்று நோய் ஏற்படும் போதும், அவற்றை விரட்டியடித்ததில் மருத்துவர்களின் இரவு பகல் பாராத உழைப்புடன், பொதுமக்களின் ஒத்துழைப்பும் கலந்திருக்கிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நோயையும் விரட்ட முடியாது; எந்த சாதனையும் படைக்க முடியாது. இப்போது கொரோனா வைரசை ஒழிக்க 21 நாள் ஊரடங்கை உறுதியாகக் கடைப்பிடித்தல் என்ற வடிவத்தில் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகத் தான் அரசு உங்களிடம் மன்றாடுகிறது.
ஆனால், அதற்குத் தேவையான ஒத்துழைப்பு மக்களிடமிருந்து முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவர்களின் உழைப்பும், உங்களின் ஒத்துழைப்பும் தான் நோயை விரட்டும் மருந்துகள் ஆகும். மக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு என்ற மருந்தை முழுமையாக வழங்காத வரை, கொரோனாவை விரட்ட முடியாது. ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களும், என்னைப் போன்றவர்களும் கடந்த மூன்று வாரங்களாக வலியுறுத்தி வரும் போதிலும் அவை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிக் கொண்டிருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கொரோனா ஒழிப்பு என்பது மாபெரும் போர். அதற்கு மக்கள் ஆதரவு முழுமையாக இருந்தால் உடனடியாக வெற்றி கிடைக்கும். அரைகுறையாக இருந்தால் வெற்றி தாமதமாகும். இதை உணர்ந்து கொண்டு கொரோனா ஒழிப்பு போருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்றார்.