சசிகலாவை முதல்வராகுவதே எங்கள் லட்சியம் - செங்கோட்டையன்
அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்துகட்சியின் அவைத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும், கட்சி வலிமையோடு இருப்பதற்கும், பொதுச்செயலர் தான் முதல்வர் பதவில் அமர வேண்டும். இதுதான் தமிழக மக்களின் மனதில் இருக்கிறது. இதைத்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பிரதிபலித்திருக்கிறோம்.
சசிகலா முதல்வராகும் வரை, எங்கள் உயிர்மூச்சு இருக்கும் வரை அவர்களுக்காக நாங்கள் உழைப்போம். இதை எங்கள் அத்தனை பேரின் உறுதிமொழியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு இம்மி அளவுகூட மாற்று அணிக்கு செல்லும் எண்ணம் எங்கள் யாருக்கும் இல்லை. கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவை தமிழக முதல்வராக அமர்த்த வேண்டும் என்பதே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அத்தனை பேரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஜனநாயகரீதியாக, ஆட்சி அமைப்பதற்கு எங்களை ஆளுநர் அழைக்க வேண்டும். நாங்கள் இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்துக் கொண்டிருப்போம் என செங்கோட்டையன் கூறினார்.