அடுத்த வாரத்தின் முதல் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
அடுத்த வாரம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 535.7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 135 செ.மீ அதிகமாக பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவலா பகுதியில் 6 செ.மீ மழையும், அதற்கு அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இல்லுப்பூரில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அந்தமான் கடற்பகுதியில் ஏற்படும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த வாரம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானத்தின் நிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அங்கு அதிகபட்ச 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை இருக்கும்.