புதிய புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்; தரைக்காற்று பலமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் உருவாகி மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் சின்னம், திங்கட்கிழமை பிற்பகலில் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இது குறித்து வானிலை மைய இயக்குனர் கூறுகையில், 


வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் டிசம்பர் 17 வரை வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 


இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே 17 ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும். வங்கக் கடலின் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரை திரும்புமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. வழக்கத்தைவிட கடல்அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.