தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு முழுவதும் ஆன்லைனில் 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. ஜூலை 3 முதல் 7ஆம் தேதி வரை முதல் சுற்று மாணவர்கள் தங்கள் கலந்தாய்வு பதிவுக்கட்டணத்தை செலுத்தினர்.


இதனைத்தொடர்ந்து ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை, www.tneaonline.in என்ற இணையதளத்தில் உள்ள Choice List-ல் மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லூரிகள் மற்றும் விருப்ப படிப்புகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி 8-ஆம் தேதியான இன்று காலை முதல் விருப்ப பட்டியலில் கல்லூரிகள் மற்றும் படிப்புகளை பதிவு செய்ய முயன்ற போது, சர்வர் கோளாறு காரணமாக இணையதளம் வேலை செய்யவில்லை என மாணவர்கள் புகார் எழுந்தது.


முதல்சுற்று மாணவர்கள் சுமார் 9,500 பேருக்கு விருப்ப பட்டியலில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 10-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தற்போது வரை இணையதளம் சீராகாததால், தங்கள் முன்னுரிமைக் கல்லூரிகள் வேறு மாணவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.


மேலும் பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், முடங்கி உள்ள இணையதளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் அச்சப்படவேண்டாம் என்றும் கால அவகாசம் நீடிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.