போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்பட்டுள்ளதால், இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார். அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.


போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் 1500 கோடி வழங்கப்படும் என அரசு உறுதியளித்த பிறகு முடிவுக்கு வந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியது:


இன்றைக்கு தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. 1250 கோடி ரூபாய் முதல் கட்டமாக வழங்குவதென்றும், மீதமுள்ள தொகையை படிப்படியாக வழங்கவும் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இந்த முடிவுக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சி யடைகிறேன். இதன் மூலம் அவர்களுடைய வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப் பெற்று, இன்று காலையிலிருந்து அவர்கள் பணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். 


எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கைகளில் இருக்கக்கூடிய மேலும் சில பிரச்சினைகளுக்கும் உடனடியாக இந்த அரசு தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.