மாவட்டங்களை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதிக்கு, சேலம் தாரமங்கலத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயம், ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சியை தொடர்ந்து, தற்போது சேலத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. தாரமங்கலம் திமுக அலுவலகத்தில் 7 அடி பீடத்தில், 8 அடி உயரளவில் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 


சேலத்தில் நடைப்பெற்ற பிரம்மாண்ட சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில், மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


இதனையடுத்து இன்று மாலை தாரமங்கலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்தார்.  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர்., தமிழ்நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மக்களை விளம்பரத்துக்காக சந்திக்க வேண்டிய அவசியம் எங்கள் கட்சிக்கு இல்லை. விளம்பரத்துக்காக நீலகிரி மக்களை தாம் சந்தித்ததாக கூறுவது முதல்வருக்கு அழகல்ல என சரமாரியாக விமர்சித்தார். 


தொடர்ந்து பேசிய அவர் மாவட்டங்களை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "திமுக ஏறக்குறைய 8 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி என்ற பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், ஆட்சியிலிருந்து என்னென்ன காரியங்களை செய்ய முடியுமோ, அந்தக் காரியங்களை ஆற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று சொன்னாலும், அவைகளை எல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் நிறைவேற்றிட வேண்டும் என்று, உரிமையோடு எடுத்துச் சொல்லி போராட்டக்கூடிய, வாதாடக்கூடிய பல்வேறு வியூங்களை அமைக்கும் நிலையில் பணியாற்றுகிறோம்.


ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் திமுகதான் மக்களுடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது; மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றது" என தெரிவித்தார்.