தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என்பது குறித்து விரிவான விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தபால் துறையில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை 14ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். 


இந்நிலையில், திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன என கேள்வி எழுப்பியது. இதற்கு, பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என மே மாதம் வெளியிட்ட அறிவிப்பாணையும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்பாணை ஆகிய இரண்டும் ரத்து செய்யப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


மேலும், அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுகளை எப்படி நடத்துவது என அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி இது குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.