சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் மற்றும் கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1996-ல் ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சர் பதவி வகித்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.


வழக்கை முதலில் விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உறுதி செய்தனர். அதன்படி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறார்.


நீதிபதிகள் வழங்கிய 570 பக்க தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 


- தங்கம், வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சம்.


- கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 90 ஆயிரம்.


- 400 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்து 80 ஆயிரம்.


- கார்களின் மதிப்பு ரூ.1 கோடியே 29 லட்சம். 


- அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.20 கோடியே 7 லட்சம். புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடியே 53 லட்சம்.


- 1996 முன்பு அவர்களது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம். மீதி சொத்துகள் அனைத்தும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதாகும்.


- தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருப்பு ரூ.97 லட்சத்து 47 ஆயிரம். ரூ.3 கோடியே 42 லட்சத்தை நிலைத்த வைப்புகளிலும், பங்குகளிலும் வைத்துள்ளனர்.


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.